தத்துவஞானி வேதாத்திரி மகரிசி எனது வாழ்க்கை விளக்கம் பாகம் 15 - ஒரு சீர்திருத்தவாதியின் தோற்றம்

 தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

எனது வாழ்க்கை விளக்கம்


பாகம் 15 - ஒரு சீர்திருத்தவாதியின் தோற்றம்


என்னிடம் உள்ளன்பு பூண்ட தவச்செல்வர்கள், அருட்செல்வர்கள், அருள்நிதியர்கள், நண்பர்கள் பலர் விரும்பியவாறு எனது வாழ்க்கை விளக்கம் எழுதத் தொடங்கினேன்.


14-8-1911 திங்கட்கிழமை காலை 6-45 மணிக்கு என் பருஉடல் பிறப்பு நிகழ்ந்தது. அன்று முதல் இன்று வரையில் இயற்கை நியதியாலும், சமுதாயச் சூழ்நிலைகளாலும் என் வாழ்வில் நிகழ்ந்த சில முக்கிய குறிப்புகளை விளக்கி விட்டேன். மேலும், அவ்வப்போது என் சிந்தனை, முயற்சி, இவற்றால் நான் ஆற்றிய சில குறிப்பிடத்தக்க செயல்களையும் விளக்கியிருக்கிறேன்.


1969 ஆகஸ்டு மாதம் தொடங்கிய எனது வாழ்க்கைக் குறிப்பு, 1970 டிசம்பர் மாதம் வரையில் பதினைந்து கட்டுரைகளில் வெளிவந்துள்ளது. தற்போது எனக்கு அறுபதாவது வயது நடந்து வருகிறது. 14-8-71 காலை 6-45 மணியோடு அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.


எல்லாம் வல்ல ஒரு முழு முதற் பொருளே, தன்மாற்ற இயல்பால் (Evolutionary Process) பேரியக்க மண்டலக்களமாகி (Universal Field) நட்சத்திரங்கள், சூரியன், கோள்கள், உலகம் இவையாகி, பலகோடி உயிரினங்களுமாகி இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து வாழத்தக்க மேலறிவே ஆளும்நிலை அறிவாகும். இவ்வறிவு மனிதனிடம் மேலோங்கி இயங்குகின்றது.


பரிணாம வளர்ச்சியில் உணர்ச்சி நிலைபெற்ற சிறப்பே உயிர்கள் ஆகும். உடலைக்கொண்டே இன்ப துன்ப உணர்வுகள் எழுவதால் அதுவரையில் தன்னைத் துண்டுபடுத்திக் கொண்டு, பசி தீர்க்கவும் பாதுகாப்பிற்காகவும் தனது ஆற்றலைப் பயன்படுத்தி, எல்லா உயிர்களும் வாழ்ந்து வருகின்றன. பொதுவாக உயிர்கட்கெல்லாம் ஐயுணர்வோடு வாழ்வு எல்லை கட்டப்பட்டது. மனிதனிடம் அமைந்திருக்கும் ஆறாவது அறிவுச் சிறப்புமிக்கது.


உயிர்களுக்கெல்லாம் மூல ஆற்றல் ஒன்றென்றும், அதுவே மெய்ப் பொருள் என்றும், உடலமைப்பிற்கேற்ப உயிராற்றலின் சிறப்பு ஒவ்வொரு உயிருக்கும் வேறுபட்டு இயங்குகின்றது என்றும், ஐயுணர்வுகளின் மூலம் பெற்ற அனுபவங்களும், ஆறாவது அறிவால் பெற்ற சிந்தனை விளக்க முடிவுகளும் மனிதனை மயக்க விளக்க நிலைகளில் பல்வேறுபட்ட பண்பாடுகளால் பிரித்துக் காட்டுகின்றது என்றும், இவ்வுண்மைகளையெல்லாம் உணரத்தக்க ஆறாவது அறிவின் உச்சத்திற்கு மனிதன் வந்துவிட்டால், உலக சகோதரத்துவ உணர்வோடு, பிறர் கருத்துக்கும் தேவைக்கும் மதிப்பளித்துத் தன் தேவை விருப்பங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு கடமையாற்றி வாழ்கிறான் என்றும், அறிந்து தெளிந்து ஒழுங்கோடு வாழும் ஆற்றல் ஆறாவது அறிவிற்கே உண்டு.


உலக சமுதாயத்திலே ஒரு உறுப்பினனாக வாழும் எனக்கு அமைந்த சூழ்நிலைகளுக்கேற்ப அவ்வப்போது ஆற்றிய செயல்களின் விளக்கமே எனது வாழ்க்கை வரலாறு. மனிதனைத் தவிர மற்ற எல்லா உயிர்களுக்கும் இயற்கை ஒழுங்கமைப்பே வாழ்க்கை வரலாறுகள், ஆனால் மனிதன் வரலாறு இயற்கை ஒழுங்கமைப்பையும் சிந்தனையின் சிறப்பாற்றலும் இணைந்த ஒரு கூட்டு இயக்க விளைவுகளாகும்.


மக்களின் தேவைக்கேற்ப இயற்கை தனது வளங்களைத் திறந்து காட்டி நிறைவு செய்து வருகிறது. சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் மூலம், வாழ்வின் நலத் தெளிவுகளை அளித்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. எண்ணிறந்த மக்களின் தேவைகளின் வேகமே, ஒரு சீர்திருத்தவாதியின் தோற்றத்திற்குக் காரணம். இந்த அடிப்படையில் நோக்கினால் எனது வாழ்க்கை வரலாற்றிற்கும், சமுதாயத்தின் எண்ணிறந்த மக்களின் தேவையும் விருப்பமுமே காரணங்களாகும்.


நாளை: “மனிதன் வாழ்வின் நலத்திற்காக நான் கண்ட விளக்கங்கள்”


- வேதாத்திரி

K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

🔔 ▶️ www.youtube.com/SkyVethathiriyaGnanakkudil 🔔

Comments

Popular posts from this blog

நேர்மறை சுய பேச்சு பயிற்சிக்கான 10 வழிகள்

முழுமை நலவாழ்விற்கு தன்னையோ கடவுளையோ ஏன் அறிய வேண்டும்?

சிந்தனை