இறை உணர்வுக்கும் அறநெறி அறிவுக்கும் மெய்ஞானம் ஓங்கி வாழ மௌன நோன்பு!
இறை உணர்வுக்கும் அறநெறி அறிவுக்கும் மெய்ஞானம் ஓங்கி வாழ
மௌன நோன்பு!
அமைதியான இடத்தில் தனித்து மௌன நோன்பு இருக்க வேண்டும். தேவையில்லாமல் கண்களைத் திறக்கவோ, படிக்கவோ, எழுதவோ, நடமாடவோ வேண்டாம்.
உடல் நல மேம்பாட்டுக்கு, உடற்பயிற்சியோடு காயகற்ப பயிற்சியும், அனைத்து வேதாத்திரிய தவங்களையும் முறையாகச் செய்து வர வேண்டும்.
மன அழுத்தம் குறையவும், தவ ஆற்றல் கூடவும் எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் ஆகிய தற்சொதனைப் பயிற்சிகளை முறையாகச் செய்து வர வேண்டும்.
மெய்ஞானம் ஓங்கி வாழ, இறைநிலைதவம் செய்து சுத்தவெளி முதல் மனித மனம் வரை இயற்கையின் அமைப்பு,இயக்கம், விளைவுகளை அகக்காட்சியாகக் காண வேண்டும். மனம் விரிந்து இயற்கையோடு கலந்து விடும்.அறிவு முழுமை பெறும்.தெய்வம் எது? என்பதும் நான் யார்? என்பதும் உள்ளுணர்வாக விளங்கிவிடும்.மெய்ஞானம் மலரும்.
உடல் நலத்தோடு நீண்ட ஆயுளோடும் வாழ, உடலில் ஐம்பூதங்களின் அளவு மற்றும் தரத்தையும், சீவகாந்தசக்தியின் செறிவு மற்றும் ஓட்டத்தையும் சீராக பராமரித்து வாழும் அறநெறிகள் உள்ளுணர்வாக விளங்கிவிடும்.
நிறைசெல்வந்தராக வாழ, ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்தி ஊக்கமுடன் உழைத்துப் பொருள் ஈட்டி, இல்லாதவர்களுக்கு பகிர்ந்து அளித்து, பிறர் தேவையை மதித்து தன் தேவைகளை கட்டுப்படித்துக் கொண்டும், ஆடம்பர வீண் செலவுகளைத் தவிர்த்தும், தேவைக்கு மேல் சொத்து சேர்க்காமலும் நிறை செல்வந்தராக வாழும் அறநெறி அறிவு உள்ளுணர்வாக விளங்கிவிடும்.
உயர் புகழோடு வாழ, எல்லோரிடமும் இன்முகத்தோடு இன்சொல் பேசிப் பழகும் முறையும், பிறர் உடலுக்கோ மனத்துக்கோ துன்பம் தராமல் வாழும் முறையும் உள்ளுணர்வாக விளங்கிவிடும்.
தெய்வத்தையும் தன்னையும் தெளிவாக அறிந்த அறிவு நிலையில், தான் தனது என்ற தன்முனைப்பு(ஆணவம் )அழிந்து சம உணர்வு (அன்பு) மலர்ந்து விடும்."இன்பம் துன்பம் என்பது என்னவென்று விளங்கி விடும். அறியாமை அகன்று அறிவு முழுமை பெறும்.
பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு விலங்கு குணங்களும் நிறைமனம், பொறுமை, ஈகை, கற்பு,சம உணர்வு, மன்னிப்பு ஆகிய ஆறு மனித குணங்களாக மாற்றம் பெற்று விடும். மனம் நிறைவும் அமைதியும் அடையும். ஆன்மா இறைநிலையை அடைந்து பிறவிப் பயனை எய்தும்.
வாழ்க வேதாத்திரியம்.
வாழ்க வளமுடன்
தொகுத்தவர்:
முதுநிலை ஞானாசிரியர் அருள்நிதி. வேதசுப்பையா.
அலைபேசி எண்:
7010955300
Comments
Post a Comment